ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது, தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். சுமார் 35 ஆண்டுகளில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலாக இது கருதப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் முகாமிட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 500 சிஆர்பிஃஎப் வீரர்கள், இன்று ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றனர். 70-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்களில் அவர்கள் சென்றனர். அவந்திபோரா என்ற இடத்தில் வாகனங்கள் வரிசையாக சென்றுக் கொண்டிருந்தபோது, மின்னல் வேகத்தில் வந்த வெடிகுண்டுகள் நிரப்பட்ட கார் ஒன்று, ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது மோதி, பயங்கரச் சத்தத்துடன் வெடித்தது. இதில், அந்த பேருந்து பல அடி உயரத்துக்கு தூக்கி எறியப்பட்டதோடு, அதில் இருந்த வீரர்களும் நாலா பக்கமும் சிதறினர்.
இந்த கோரத் தாக்குதலில், ஏராளமான வீர்ர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பல வீரர்கள் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இந்த தாக்குதலை அடுத்து, பிற வாகனங்களில் சென்ற வீரர்கள், உயிருக்கு போராடிய சகவீரர்களை காப்பாற்ற முயன்றனர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், காப்பாற்ற சென்ற வீரர்கள் சிலரும் உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல்களில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின் உடல்பாகங்கள் ஆங்காங்கே சிதறியதால், அந்த இடமே போர்க்களம் போன்று காட்சியளித்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாமிட்டிருந்த பாதுகாப்புப் படையினர், சம்பவம் நிகழ்ந்த இடத்தை நோக்கி பறந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை பிடிக்க, அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு படையினரும் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இதனிடையே, ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது. வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காருடன் சென்ற தீவிரவாதியின் பெயர் Adil Ahmad என்பது தெரியவந்துள்ளது. புல்வாமா மாவட்டத்தின் Kakapora பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு தான் தீவிரவாத அமைப்பில் இணைந்தார், என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
புதன்கிழமை காலையில், Gopalpora பகுதியில், பாதுகாப்புப் படையினரால் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு பழிக்குப் பழியாக இந்த கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த 1980ஆம் ஆண்டுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டையே அதிரவைத்துள்ள இந்த தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
source: ns7.tv