திங்கள், 25 பிப்ரவரி, 2019

வெனிசுலாவில் உச்சத்தை அடைந்துள்ள மக்கள் போராட்டம்! February 25, 2019

Image
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் மக்கள் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ளது. நிவாரணப் பொருட்களுக்கு கூட அந்நாட்டு அதிபர் தடை விதித்ததால் மக்கள் அடிப்படை உதவிகளுக்கு அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. 
மத்திய கிழக்கில் எண்ணெய் வளமிக்க நாடுகளை சுழன்றடித்த போராட்டம் இப்போது தென்னமெரிக்க நாடுகளில் வீசிக்கொண்டிருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா உலகின் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்றாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே கடும் பணவீக்கத்தால் வெனிசுலா பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் வறுமையில் வாடி வருகின்றனர். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா தவித்து வரும் நிலையில், பிறநாடுகள் உதவிப் பொருட்கள் அனுப்புவதற்கும் அதிபர் மதுரோ எதிர்ப்பு தெரிவித்திருப்பது வன்முறையை ஏற்படுத்தி உள்ளது.
வரலாறு காணாத வறுமையில் வாடும் மக்களுக்கு உதவ அதிபர் மதுரோ நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.  அதே நேரத்தில், பிரேசில் மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதற்கும் வெனிசுலா அரசு தடை விதித்ததால், ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
நிவாரணப் பொருட்களை தடுத்து நிறுத்துவதற்கு உத்தரவிட்ட அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், வெள்ளை மாளிகையில் உள்ளவர்கள் வெனிசுலாவில் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக மதுரோ குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை வெனிசுலா தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பல்வேறு நாடுகளின் கோரிக்கையாக உள்ளது. 

source NS7.tv