சனி, 23 பிப்ரவரி, 2019

பாகிஸ்தானிற்கு வழங்க இருந்த ரூ. 9,000 கோடி நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா! February 23, 2019

Imageபுல்வாமா தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவித்த 9,000 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் கவலை அளிப்பதாகவும், அது மிகப்பெரிய ஆபத்தானது எனவும் குறிப்பிட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு நல்ல உறவு இருந்ததாகவும், புல்வாமா தாக்குதலால், அந்த உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ட்ரம்ப் கேட்டுக்கொண்டார். 
இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் முன்பாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புல்வாமா தாக்குதல் கோழைத்தனமானது என கோஷம் எழுப்பிய அவர்கள், பாகிஸ்தானுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயங்கரவாத செயல்களை கைவிட்டுவிட்டு, நாட்டின் வளர்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
source: ns7.tv