புதன், 20 பிப்ரவரி, 2019

புதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை! February 19, 2019

source ns7.tv
Image
தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த வெங்கிடுசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," தமிழக ஊரக பகுதிகளில் பெட்ரோல் பங்குகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் 2018 நவம்பர் 25ல் வெளியிட்டன. 

2018 ஏப்ரல் 1 நிலவரப்படி தமிழகத்தில் தனியார் பங்குகள் உட்பட 5,388 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்நிலையில் குறைந்த கால அளவில், 5,125 பெட்ரோல் பங்குகளைத் தொடங்க அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவு அரசியல் அழுத்தத்தில், முறையாக ஆய்வு செய்யப்படாமல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனை பாதிக்கும்.  பெட்ரோல் பங்குகள் தடையில்லா சான்று வழங்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

ஆனால், மாவட்ட நிர்வாகங்கள் அவற்றை கருத்தில் கொள்ளாமல், தடையில்லா சான்று வழங்கி வருகின்றனர்.  பொது கட்டிடங்களுக்கும் பெட்ரோல் பங்குகளுக்கும் இடையே 100 மீ இடைவெளி இருக்க வேண்டும்.  மணிப்பூரில் புதிதாக பெட்ரோல் பங்குகள் தொடங்குவது தொடர்பாக மாநில அரசு உரிய விதிகளை வகுக்கும் வரை, புதிதாக பெட்ரோல் பங்குகளை திறக்க கூடாது என மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் கழிவுப்பொருட்கள் பொதுக்கால்வாயில் விடப்படுகின்றன. இது பொதுசுகாதாரத்திற்கு கேடாக அமைகிறது. 
தடையில்லா சான்று வழங்கும் போது மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்துவதில்லை. பெட்ரோல் நுகர்வு மற்றும் தேவை குறித்து உரிய கணக்கீடு செய்யாமல் பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை இரட்டிக்க முடிவெடுத்துள்ளனர். இதனால், ஏற்கனவே பெட்ரோல் நிலையங்கள் வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். பெட்ரோலுக்கான மாற்று எரிபொருள் கொள்கையை மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பெட்ரோல் பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருப்பது முரணாக உள்ளது. 
ஆகவே, புதிதாக  5,125 பெட்ரோல் பங்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடை விதித்தும், பெட்ரோல் பங்குகள் அமைப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, புதிதாக  5,125 பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தும், இது தொடர்பாக  தமிழக வருவாய்த்துறை செயலர், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.