செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! February 18, 2019


Image
குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் 2,15,000 வழக்குகள் முடித்து வைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து மாவட்ட நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் பின்பற்றிய உத்தரவுகள் விவரம் காவல்துறை, விசாரணை அதிகாரிகள் குறித்த கால அளவிற்குள் விசாரணையை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் அறிவுறுத்த நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.
அதேபோல, வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் அந்த வழக்கில் உரிய நேரத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய வேண்டும், குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் அந்த வழக்கின் விசாரணை அதிகாரி குறித்து உயர் அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் குற்றபத்திரிகையின் தேதி குறித்து மாவட்ட நீதிபதிகள் பதிவு செய்து வைக்க தலைமை மாவட்ட நீதிபதி உத்தரவிட வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒருமுறை குற்ற வழக்குகளில் மாவட்ட நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளின் விவரத்தை மாவட்ட தலைமை நீதிபதிக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
உரிய காலத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா என காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்றும் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாத காவல் அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
 இந்த உத்தரவின் நகலை அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவினை செயல்படுத்தியது குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்