சனி, 16 பிப்ரவரி, 2019

இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன்வந்துள்ள வெனிசுலா! February 15, 2019

Authors
Image
ஈரானை தொடர்ந்து வெனிசுலாவும் இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய முன் வந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் டாலர் பிரச்னை இல்லாமல், ரூபாயில் வர்த்தகம் செய்யவும், பண்ட மாற்று முறையில் கச்சா எண்ணெயை பெறவும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அரசியல் குழப்பம் உச்சமடைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, வறுமை போன்றவற்றால் மக்கள் வீதிகளை போரட்ட களமாக மாற்றியுள்ளனர். இதனிடையே அந்நாட்டின் எதிர்கட்சி தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு, சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
வெனிசுலா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை கடந்த மாதம் புதிய பொருளாதார தடை விதித்ததால் பெரும் இன்னலுக்கு ஆளாகி கச்சா எண்ணெயை பிற நாடுகளுக்கு விற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சீர்படுத்தும் நோக்கில் டாலருக்கு பதிலாக அந்தந்த நாடுகளின் பணத்தில் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அதிபர் மதுரோ திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ரூபாய் மதிப்பில் கச்சா எண்ணெய் வாங்க வெனிசுலாவிடம் இந்தியாவும் பேச்சு நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
அமெரிக்காவின் பொருளாதார தடை உள்ள போதிலும், ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வருவதை போல் வெனிசுலாவிடமும் வாங்கினால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையவும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகினறனர். ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு அத்தியாவசியப் பொருட்களையும், மீதி பணத்திற்கு ரூபாயையும் இந்தியா செலுத்தி வருகிறது. 
ஆனால், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. அதிபர் மதுரோ அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாததால் அவர் விற்பனை செய்யும் கச்சா எண்ணெய்  திருடுவதற்கு சமம் என கூறியுள்ள அமெரிக்கா, வெனிசுலாவுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கும் தக்க பதிலடி காத்திருப்பதாகவும் மிரட்டல் விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் ஈரானை போலவே தடையை மீறி வெனிசுலாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குமா அல்லது நட்பு நாடான அமெரிக்காவின் பேச்சை கேட்டு நடந்து கொள்ளுமா என்பது இன்னும் சில நாட்களில் அம்பலமாகி விடும். 

source: ns7.tv