source ns7.tv
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் தமிழக அரசின் சிறப்பு நிதி பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.
கஜா புயல், பருவமழை பொய்த்திருப்பதால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தமிழக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏழைத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.
60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் வழங்க 1,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, இந்தப் பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
ஏழைத்தொழிலாளர்களை எவ்வாறு கண்டறிவது என்ற குழப்பம் நிலவிவந்த நிலையில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் ஏற்கனவே உள்ளாட்சி துறையில் தயாராக இருப்பதாகவும், அவர்களிடம் அதனை பெற்று, நிதித்துறை சார்பில் நிதி ஒதுக்கியதும் 60 லட்சம் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக இம்மாத இறுதிக்குள் பணம் செலுத்தப்படும் என்று வருவாய்த்துறை தெரவித்துள்ளது.