இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிநீரை தடுத்து நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த “மிக அனுகூலமான நாடு” என்ற அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய நதிகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக செல்லும் தண்ணீர் அரபிக் கடலை அடைவதாகவும், இந்த 3 நதிகளின் தண்ணீரையும், பாகிஸ்தானுக்கு செல்ல விடாமல் தடுக்க உள்ளதாகவும் கூறினார்.
தடுப்பணை அமைத்து 3 நதிகளின் தண்ணீரையும் யமுனை ஆற்றுக்கு திருப்பி விட உள்ளதாகவும், இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநில மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
source: Ns7.tv
http://www.ns7.tv/ta/tamil-news/world-editors-pick/22/2/2019/india-planned-stop-flow-3-rivers-pakistan