source ns7.tv
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிந்து 16 ஆண்டுகள் ஆகியும் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அறிக்கைகள் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்றார். அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்காக, அமெரிக்காவின் ஃப்ளோரிடா மற்றும் டெல்லி மையங்களுக்கு வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எத்தனை இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வு நடைபெறுகிறது? எனவும், தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் எத்தனைவற்றிற்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளது? எனவும், தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கபட்டதில் எத்தனை பொருட்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பபட்டுள்ளது? இந்தியாவில் அகழ்வாய்வு நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்குகிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய தொல்லியல்துறை இயக்குனர் பிப்ரவரி 25ல் பதிலளிக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து ஓய்வுபெற்ற தொல்லியல் துறை அதிகாரிகள் சத்தியபாமா, சத்தியமூர்த்தி ஆகியோர் பிப்ரவரி 25ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கினை ஒத்திவைத்தனர்./