வியாழன், 14 பிப்ரவரி, 2019

ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்! February 14, 2019


Image
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ரஃபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை, நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
பிரான்சிடம் இருந்து இந்திய விமானப்படைக்கு 126 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்திருந்தது. பின்னர் பதவியேற்ற பாஜக அரசு, 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டது. இதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், நாடாளுமன்றக்கூட்டுக்குழு விசாரணைக்கும் வலியுறுத்தி வருகின்றன. 
இந்நிலையில், ரஃபேல் போர் விமான கொள்முதல் விவகாரம் தொடர்பாக, தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் 
141 பக்க அறிக்கை, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், 32 பக்கங்கள் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. அதில், முந்தைய காங்கிரஸ் அரசைக்காட்டிலும், ரஃபேல் விமானம் 2 புள்ளி 86 சதவீதம் மலிவு விலையிலேயே தற்போது கொள்முதல் செய்யவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேம்படுத்தப்பட்ட 36 விமானங்களை வாங்குவதன் மூலம், 17 சதவீதம் அளவிற்கு பணமும் சேமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் 2017 ஆம் வரை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்யப்பட்ட தளவாடங்கள் குறித்த ஒப்பந்த விவரங்களும் சிஏஜி அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ரஃபேல் போர் விமானம் தொடர்பான சிஏஜி அறிக்கை பயனற்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ரஃபேல் முறைகேட்டை கண்டித்து ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் ஆர்ப்பாட்டமும் 
நடத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்

source ns7.tv