ஆந்திராவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தன் மகனின் திருமணத்திற்காக வெறும் 36,000 ரூபாய் செலவு செய்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழி, மதம், ஜாதி என்று பாரபட்சம் இல்லாமல், அனைவரும் அவர்களது திருமண நிகழ்ச்சியை வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என நினைப்பர். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த எண்ணம் என்றால், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டவர்களின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்வு மிக பிரம்மாண்டமான நடைபெறும். ஆனால், அதற்கு விதிவிலக்காக ஆந்திரவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி பட்னாலா பசந்த் குமார் என்பவரது மகனின் திருமணம் நடைபெற்றிருக்கிறது.
பிப்ரவரி 10ம் தேதி நடைபெற்ற இந்த திருமணம், வெகு எளிமையாக நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமணத்திற்கான மொத்த செலவு வெறும் 36000 ரூபாய் என பசந்த் குமார் தெரிவித்தார். இதில் மற்றொரு சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த 36,000 ரூபாயையும் மணமக்கள் வீட்டார் சரிபாதியாக பகிர்ந்து செலவழித்துள்ளனர். ஏற்கனவே, கடந்த 2017ம் ஆண்டு, தன் மகளின் திருமணத்தை வெறும் 16,100 ரூபாய் செலவில் முடித்ததற்காக பசந்த் குமார் பலரின் பாராட்டுக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.