திங்கள், 11 பிப்ரவரி, 2019

இடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு வலது காலில் சிகிச்சை செய்த மருத்துவர்கள்! February 11, 2019

source ns7.tv
Image
ஹைதராபாத்தில் பெண் ஒருவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த போது சிகிச்சைக்கு பயன்படுத்திய கத்திரிக்கோல்களை வயிற்றிலேயே மறந்து வைத்து விட்டு 3 மாதங்கள் கழித்து அதனை மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஒடிசாவில் பெண் ஒருவரது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர்கள் அவரின் வலது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் Keonjhar மாவட்டத்தில் உள்ள கபில் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மிதாராணி ஜேனா, இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக அனந்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அங்கிருந்த செவிலியர்களிடம் அவருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரது காயத்திற்கு மருந்து அளித்து கட்டு போடுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
மயக்கம் தெளிந்து காயம்பட்ட காலுக்கு பதிலாக மற்றொரு காலில் சிகிச்சை அளித்து கட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, அலட்சியமாக சிகிச்சையளித்த மருத்துவர்கள் குறித்து நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.
இதன் காரணமாக தற்போது அவரால் இயல்பாக நடக்க முடியாமல் போயுள்ளது. சிறிது நாட்களுக்கு பின்னரே அவரால் இயல்பாக நடக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.