ஞாயிறு, 24 பிப்ரவரி, 2019

சேலம் அருகே பயங்கர காட்டுத் தீவிபத்து: நேரில் பார்வையிட்டார் ஆட்சியர் ரோகினி! February 24, 2019

Image
சேலம் அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. வனப்பகுதியில் சிக்கிய 30 குடும்பத்தினரை, வனத்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
சேலம் மாவட்டம் கிழக்கு மலைத் தொடர்ச்சியான ஏற்காடு சேர்வராயன் மலை வனப்பகுதிகளில் வெயில் அதிகரித்ததால் வறட்சி நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் ஏற்காடு அடிவாரப் பகுதியில் அடர்ந்த காட்டுப் பகுதியில் திடீரென பரவிய தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. தீ மேலும் பரவாமல் இருக்க எல்லை பகுதிகளில் தண்ணீரை ஊற்றினர். 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏற்காடு மலை பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மூங்கில் மரங்கள், வேம்பு மரங்கள், கருங்காலி மரங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அரிய வகை நாரை, சாம்பல் நாரை பறவைகள், கொக்கு, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட விலங்குகளை உடனடியாக வனத்துறையினர் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்றினர். மாவட்ட ஆட்சியர் ரோகினி தீவிபத்து நடந்த பகுதிகளை  பார்வையிட்டார். தீ விபத்து காரணமாக 40 ஏக்கர் பரப்பில் இருந்து மரங்கள் எரிந்து நாசமானதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.