source ns7.tv
உலகிலேயே, இந்தியாவில்தான் அதிக அளவு போலி செய்திகள் பரப்பப்படுவதாக சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில், வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமடைந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும் இதற்கு அடிமையாகிவிட்டதால், சமூகவலைதளங்களில் பரவும் செய்திகள் உண்மையானதா இல்லையா என்பதறியாமல் நிறைய பேர் போலி செய்திகளை பரப்பிவிடுகின்றன. இந்நிலையில், போலி தகவல்கள் குறித்து அண்மையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில், உலகம் முழுக்க 57% மக்களும், 64% இந்திய மக்களும் போலி செய்திகளை எதிர்கொண்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
64% இந்தியர்கள் எதிர்கொண்ட போலி செய்திகளில் 54% இணையதளங்களில் வேண்டுமென்றே பரப்பப்படும் போலி செய்தியாக இருக்கின்றது. இதுபோன்ற போலி செய்திகளால் சாமானிய மக்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர். குறிப்பாக, வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் போலி செய்திகளினால் பல மக்கள் மோசமான செயல்களிலும் ஈடுபடத்தொடங்கினர். இதனையடுத்து, வாட்ஸ் அப் மூலம் போலி செய்திகளை தடுக்க நடவடிக்கை எடுத்த வாட்ஸ் அப் நிறுவனம், ஒரு தகவலை குறைந்த நபர்களுக்கு மட்டுமே ஃபார்வார்ட் செய்யப்படும் முறையை அமல்படுத்தியது.
இதுமட்டுமல்லாமல், artificial intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியால், ஆபத்தான தகவல்களை பரப்பும் வாட்ஸ் அப் கணக்குகளை கண்காணிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது வாட்ஸ் அப். இதற்கிடையே, இந்தியாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் கூட 29% போலி செய்திகள் பரவி வருவதாக மைக்ரோசாப்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.