கொரோனா வைரசின் தாக்கத்தால், சீனாவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என கணித்துள்ளனர் வல்லுநர்கள்.
சீனா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா. சீனாவில் மட்டும் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சீனாவின் பொருளாதாரத்தையும் நிலை குலைய வைத்துள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தக போரின் போதும், உலக நாடுகளை வாட்டும் பொருளாதார மந்த நிலையின் போதும் சீனாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கவில்லை. காரணம் அந்நாடு பின்பற்றும் தற்சார்பு பொருளாதாரம் அவர்களை காத்தது. ஆனால் அத்தனையையும் தவிடு பொடியாக்கி உள்ளது கொரோனா.
இந்த வைரசின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதும், சீனாவின் ஏற்றுமதி துறை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கொரோனா குறித்த அச்சத்தால் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில் உலக நாடுகள் சுணக்கம் காட்டி வருகின்றன.
இவை எல்லாவற்றையும் தாண்டி, சீனாவின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தொழிற் நிறுவனங்களுக்கு காலவரையற்ற விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு உற்பத்தி, தொழில்கள் , பணிகள் எல்லாம் முடங்கி உள்ளன. 20 நாட்களாக அங்கு இந்த நிலைமைதான் நீடித்து வருவதால் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 10 வருடங்களாக தொடர்ந்து முன்னேறி வந்த நிறுவனங்கள் தற்போது சரிவை சந்தித்துள்ளதால், அதனை மீட்டெடுப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளதே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது சீனாவில் பொருளாதா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இதனை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
credit ns7.tv