புதன், 5 பிப்ரவரி, 2020

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு..!

Image
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கடந்த 13-09-2019 அன்று 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பெற்றோர் என பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த ஆண்டு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெறாது எனவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 
sengo
மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வின் நிறுவனர் ராமதாசும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் தமிழகத்தின் பிராதன எதிர்க்கட்சியான திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோரும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், இந்த தேர்வு மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர். 
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இந்த பொதுத்தேர்வால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்று தெரிவித்தார். மேலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்காக  மட்டுமே தேர்வு நடைபெறும் என்று எந்த மாணவர்களும் தோல்வியடையமாட்டார்கள் என்றும் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இன்று 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் பழைய நடைமுறையே தொடரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
credit ns7.tv