எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் கடும் அமளி நிலவியது.
எஸ்.டி, எஸ்.டி இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. இதுதொடர்பாக பேசிய திமுக உறுப்பினர் ஆ.ராசா, மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இடஒதுக்கீட்டுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினர். உத்தராகண்டில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். வாக்குவாதம் செய்த பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இதுதொடர்பாக மக்களவையில் பதிலளித்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநில அரசு பணிகள் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவது தனி நபரின் அடிப்படை உரிமை அல்ல என்று நீதிமன்றம் கூறியிருப்பதையும் ராஜ்நாத்சிங் குறிப்பிட்டார். இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதாக கூறிய அவர், மத்திய சமூக நலத்துறை அறிக்கை வெளியிடும் வரை காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இடஒதுக்கீடு என்பது, பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சித்தாந்தத்திற்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி இடஒதுக்கீட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்றும் குறை கூறினார்.
credit ns7.tv