செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி பொதுமக்கள், மாணவர்கள் பேரணி: போலீசாருடன் கைகலப்பு


2020-02-11@ 00:19:00








புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள் நேற்று மத்திய டெல்லியின் சாலைகள் வழியாக நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்ததால் லேசான கைகலப்பு ஏற்பட்டது பதற்றம் ஏற்பட்டது. டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் காரணமாக சிறிது ஓய்ந்திருந்த குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ),  தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு (என்ஆர்சி) எதிரான போராட்டம் மீண்டும் சூடிபிடித்துள்ளது. ஜமியா ஒருங்கிணைப்பு குழு (ஜேசிசி) சார்பில் நேற்று நடைபெற்ற பேரணி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றது. ஜமியா பல்கலைக் கழகத்தின் வாயில் 7ல் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணிக்கு அனுமதி தரப்படவில்லை என போலீசார் கூறி அதை தடுத்து நிறுத்தினர்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடப்பதால், அப்பகுதியில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். ஜமியா பல்கலைக்கழக வளாகத்தை சுற்றியும் அதிரடி படையினர் உள்ளிட்ட போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பேரணியை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், அவர்கள் கைக்கலப்பில் ஈடுபட்டனர். பலர் போலீசாரின் தடுப்புகள் மீது ஏறி குதித்தனர். ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக புராக்டர் வாஸீம் அகமது கான், ‘‘மாணவர்களே கலைந்து செல்லுங்கள். போலீசாருடன் மோத வேண்டாம். உங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. தயவுசெய்து பல்கலைக்கழகத்துக்குள் செல்லுங்கள். சட்டத்தை மதியுங்கள், அமைதியாக திரும்பி செல்லுங்கள்’’ என வேண்டுகோள் விடுத்தார்.ஆனால், அதைக்கண்டுக்கொள்ளாமல் போலீசாரின் தடுப்பின் மீது ஏறிச் செல்வதிலேயே குறியாக இருந்தனர். அவர்களை போலீசார் பலப்பிரயோகம் செய்து தடுத்தனர்.
Credit Dinakaran.com