தனி நபர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கூடாது என கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 369 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலம் கையகப்படுத்தும் விதிகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி, அரசின் அறிவிப்பாணையை கடந்த 1996ம் ஆண்டு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17,70,000 பேர் வீடு இல்லாமல் இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தர நிலங்கள் கையகப்படுத்தும் போது, அதிகாரிகள் உரிய சட்ட விதிகள் பின்பற்றபடாததால் அரசின் முயற்சிகள் தோல்வியடைவதாக அதிருப்தி தெரிவித்தனர். இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போரின் வருவாய் ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், அரசின் இந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது, மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்தும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கடன் கொடுக்க கூடாது என வங்கிகளுக்கு ஏன் தடை விதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மார்ச் 6ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
credit ns7.tv