ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால், ஏதேனும் ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த பின்பு, ஆர்.டி.ஓ அதிகாரி முன்பு வாகனத்தை, 8 வடிவில் இருக்கும் தளத்தில் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்ற விதி தற்போது உள்ளது. சரியான விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை முறையாக இயக்கினால் மட்டுமே, ஓட்டுநர் உரிமம் கிடைக்கும் என்ற விதிமுறையில் மத்திய அரசு தற்போது மாற்றம் செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் மாதிரி வாகனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும், போக்குவரத்து விதிமுறைகள்படி அமைக்கப்பெற்ற மாதிரி சாலைகளில் பயிற்சி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவர்கள், அந்த சான்றிதழை வைத்து ஆர்டிஓ அதிகாரி முன்பு நடைபெறும் சோதனையில் பங்கேற்காமல் நேரடியாக ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. திறமையான ஓட்டுநர்களின் பற்றாக்குறையை போக்கவும், சாலை விபத்துகளை தவிர்க்கவும் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையம் வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
source https://news7tamil.live/those-who-are-trained-by-center-approved-driving-schools-are-exempted-by-rto-test.html