நடிகர் விஜய் சேதுபதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதையாக பேசியதாகவும் அதனால், விஜய் சேதுபதியை உதைத்தால் 1001 ரூபாய் பரிசு தருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவித்ததால் சர்ச்சையாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக அர்ஜுன் அம்பத் அறிவித்திருப்பதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, அண்மையில் பெங்களூரு விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்த நபர் விமானத்தில் மது அருந்திவிட்டு இருந்ததாகவும் அவர் விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பியதாகவும் ஆனால், மது அருந்தி இருந்ததால் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சன் செல்ஃபி எடுக்க மறுத்ததாகவும் கூறப்பட்டது. இதனால், விஜய் சேதுபதி உதவியாளருக்கும் அந்த நபருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து விமான நிலையத்தில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக விமான நிலைய போலீசார் விசாரித்து இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர், தனது பெயர் மகா காந்தி என்றும் விஜய் சேதுபதி தேசிய விருது வாங்கியதற்காக நன்றி தெரிவிக்க சென்றதாகவும் ஆனால், அவர் இது தேசமாக என்று கேட்டதாகவும் விஜய் சேதுபதி மீது குற்றம் சாட்டினார். மேலும், விஜய் சேதுபதியை குரு பூஜைக்கு வந்தீர்களா என்று கேட்டதற்கு குரு என்றால் யார் என்று கிண்டலாக கேட்டதாகவும் மகா காந்தி என்பவர் தெரிவித்தார். மேலும், விஜய் சேதுபதியின் உதவியாளர்கள் தன்னை அடித்ததாகவும் அதனால் தான் அடித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், முத்துராமலிங்கத் தேவரை அவமரியாதை செய்யும் விதமாக பேசிய விஜய் சேதுபதியை உதைத்தால் அவர்களுக்கு 1001 ரூபாய் பரிசு அளிப்பதாக விடுத்த அறிக்கை சர்ச்சையாகி உள்ளது. இதனால், நடிகர் விஜய் சேதுபதியை அச்சுறுத்தும் விதமாக அறிக்கை அறிக்கை வெளியிட்டுள்ள அர்ஜுன் சம்பத் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளன. அர்ஜூன் சம்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/arjun-sampath-announces-prize-to-kick-on-actor-vijay-sethupathi-controversy-366462/