வியாழன், 11 நவம்பர், 2021

அபுதாபியில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு புதிய சிவில் சட்டம்: என்னென்ன மாற்றங்கள்?

 ஜக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் இனி திருமணம் செய்துகொள்ளவும், விவகாரத்து பெறவும்,வாரிசுமை பெறவும் புதிய சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, முஸ்லிம் அல்லாதவர்கள் தூதரகம் வழியாக தான் திருமணம் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. சர்வதேச சமுதாயத்தின் வரவேற்பை பெறும் நோக்கில், இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சட்டத்தின் அவசியம் என்ன

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளார். முஸ்லிம் அல்லாத குடும்ப விவகாரங்கள் தொடர்பாக எமிரேட்ஸ் இயற்றிய முதல் சிவில் சட்டம் இது தான்.

மற்ற வளைகுடா நாடுகளைப் போல அபுதாபியில் இஸ்லாமிய ஷிரியா சட்டத்தின் அடிப்படையில் திருமணச் சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.

புதிய சட்டத்தின் கீழ், முஸ்லிம் அல்லாதவர்களின் குடும்ப விவகாரங்களை விசாரிப்பதற்காக புதிய நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். வெளிநாட்டவர்களால் நீதித்துறை நடைமுறைகளைப் புரிந்துகொள்வதற்கு எதுவாக அரபு மற்றும் ஆங்கிலத்தில் செயல்படும் என கூறி, முதல் நீதிமன்றத்தை நீதித்துறை அறிவித்தது.

இந்த சட்டம் திருமணம், விவாகரத்து, குழந்தை பராமரிப்பு மற்றும் பரம்பரை என ஐந்து சேப்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து சேப்டர்கள் சொல்வது என்ன?

முதல் சேப்டர்: கணவன் மற்றும் மனைவியின் விருப்பத்தின் பேரில், வெளிநாட்டினர் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறுகிறது.

இரண்டாம் சேப்டர்: முஸ்லீம் அல்லாதவர்களுக்கான விவாகரத்து நடைமுறைகளுக்கான கூறுகிறது. விவகாரத்து பெற்ற பிறகு அவர்களுக்கான உரிமைகள் மற்றும் ஜீவனாம்சம் வாங்குவது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மனைவிக்கு பணம் வழங்குவது, திருமணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகுகிறது, மனைவியின் வயது, இருவரின் பொருளாதார சூழ்நிலை அடிப்படையில் நீதிபதி முடிவு செய்வார்.

மூன்றாவது சேப்டர்: விவாகரத்துக்குப் பிறகு குழந்தையின் பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. அது, கூட்டு பாதுகாப்பை வலியுறுத்துகிறது. கணவர் மற்றும் மனைவி இருவரும், குழந்தையை பார்த்துக்கொள்ளலாம் என சொல்கிறது. குழந்தைகளின் உளவியல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நான்காம் சேப்டர்: முஸ்லீம் அல்லாதவர்களுக்கான உயில்களைப் பதிவு செய்வதற்கான சட்டங்களைக் கூறுகிறது. வெளிநாட்டவர் உயில் எழுதுவதற்கும், அவர்களின் சொத்துக்களை விரும்பும் நபர்களுக்கு வழங்குவது குறித்தும் சொல்கிறது.

ஐந்தாம் சேப்டர்: வெளிநாட்டு இஸ்லாமியர் அல்லாதேரின் தந்தை வழி மரபு குறித்து சட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது. அதில், பிறந்த குழந்தையின் தந்தை யார் என்பது திருமண சான்றிதழ் அல்லது தந்தை வழி மரபு சான்றிதழ் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது.

அபுதாபி நீதித்துறையின் துணைச் செயலாளர் யூசுப் சயீத் அல் அப்ரி கூறுகையில், “நீதிமன்றத்திற்கு வரும் முஸ்லீம் அல்லாதவர்களின் விவகாரங்களுக்குப் புதுமையான தீர்வுகளை வழங்கும் நோக்கில் நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அபுதாபி எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப நவீன நீதித்துறை கட்டமைப்பை வழங்கும் நோக்கில் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

என்னென்ன மாற்றங்கள்?

ஷரியா சட்டத்தின் கீழ் திருமணம் செய்திட மணமகனும், மணமகளும் முஸ்லீமாக இருக்க வேண்டும் அல்லது மணமகன் முஸ்லீமாகவும், மணமகள் கிறிஸ்தவராக இருக்கலாம்.

அதன்படி, முஸ்லிம் ஆண்கள் இஸ்லாமியர் இல்லாத பெண்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. ஆனால், முஸ்லிம் பெண்கள், இஸ்லாமியர் இல்லாத ஆண்களை திருமணம் செய்ய அனுமதி கிடையாது.

புதிய சட்டத்தின் படி, ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது விருப்பத்தின் பேரின் திருமணம் செய்துகொள்ளலாம். மதப் பாகுபாடு இனிமேல் கிடையாது.

அதேபோல், முன்னதாக உடல் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டதை நிரூபித்தால் மட்டுமே, விவகாரத்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆண் அல்லது பெண், யார் வேண்டுமானாலும் விவகாரத்துக்கு அப்ளை செய்யலாம்.

விவாகரத்து கோரும் தம்பதிகள், குடும்ப வழிகாட்டுதல் துறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அதன்பிறகு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு, இரு தரப்பிலும் பேசி சமரசம் செய்ய முயற்சி நடைபெறும். அதன்பிறகே, விவகாரத்துத் தொடர்பான பிராசஸ் தொடங்கும். தற்போது, இந்த செயல்முறைகளைப் பின்பற்றாமல் முதல் விசாரணையில் விவாகரத்து வழங்கப்படலாம்.

குழந்தையின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, புதிய சட்டம் பெற்றோர் இருவரை குழந்தை பராமரிப்பைப் பகிர்ந்துகொள்ளலாம் என கூறுகிறது. ஆனால், முன்பு குழந்தை தாயார் கஸ்டடியிலும், குழந்தைக்கான நிதியுதவி போன்ற பொருளாதார பாதுகாவலராகத் தந்தையும் இருக்க அறிவுறுத்தப்படும். குழந்தைக்கான பிரச்சினையை இருவரும் தனித்தனியாக தான் கையாண்டு வந்தனர்.

கடுமையான சட்டங்களை மாற்றிவரும் ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர்களின் கூற்றுப்படி, “இந்த சட்டம் அபுதாபி அரசின் தலைமையையும், உலகளாவிய அந்தஸ்தையும் பிரதிபலிக்கிறது”, காலங்கள் மாறிவரும் சமயத்தில் சட்டங்களை சீர்திருத்துவது இது முதல் முறை அல்ல.

கடந்தாண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தம்பதியினரிடையே திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கும், மது கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும், ஆணவ கொலையைக் குற்றமாக்குவதற்கும் தனிப்பட்ட இஸ்லாமிய சட்டங்களை சீர்திருத்தியது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/explained/abu-dhabi-passed-a-law-allowing-non-muslims-to-marry-and-divorce-under-civil-law-367281/

Related Posts: