திங்கள், 15 நவம்பர், 2021

அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எப்போது, எங்கே கரையை கடக்கும்?

 14 11 2021 தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்தது. குறிப்பாக, வட தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் அணைகள், ஏரிகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரண்டு நாள்களாக, மழை நின்றுள்ளதால் சென்னையில் சாலைகளில் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், நேற்று சனிக்கிழமை தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை எப்போது தாக்கும் என்பதை கீழே காணலாம்.

காற்றழுத்த தாழ்வு பகுதி அதே திசையில் பயணித்து வந்தால், ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தமானுக்கு வந்தடையும். 15 ஆம் தேதி அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், அங்கு அதி கனமழை பெய்யக்கூடும். திங்கட்கிழமை நவம்பர் 16 காலை நிலவரப்படியும், அந்தமானில் தான் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருக்கிறது.

அடுத்ததாகச் செவ்வாய்க்கிழமை( நவம்பர் 17) மதியம் 3 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு பகுதி தென்னிந்தியாவை நோக்கி பயணிக்கிறது. அப்போது, அது தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

தொடர்ந்து, புதன்கிழமை (நவம்பர் 18) அதிகாலை ஆந்திரா நோக்கி தாழ்வு மண்டலம் செல்வதை செயற்கைக்கோள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. வியாழக்கிழமை, சென்னையிலிருந்து 400 கிமீ தூரத்தில் மச்சிலிப்பட்டணம் என்னும் இடத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிகிறது.

வியாழக்கிழமை கரையை கடக்கும் தாழ்வு மண்டலம், வெள்ளிக்கிழமை வலுவிழந்த நிலையில் ஆந்திராவில் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமானிலிருந்து நவம்பர் 15,16 ஆம் தேதிகளில் தென்னிந்தியாவை நோக்கி தாழ்வுப் பகுதி வருவதால், அப்போது தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இருப்பினும், காற்றின் திசையை பொருத்து தாழ்வுப் பகுதி செல்லும் வழி மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

source https://tamil.indianexpress.com/tamilnadu/low-pressure-area-formed-over-andaman-sea-near-thailand-368969/

Related Posts: