திங்கள், 15 நவம்பர், 2021

முல்லைப் பெரியாறு அணை; பலப்படுத்தும் பணிகளை கேரளா தடுப்பதாக தமிழக அரசு குற்றச்சாட்டு

 முல்லைப் பெரியாறு அணையில் மரங்கள் வெட்டும் உத்தரவு தொடர்பான கடுமையான பிரச்சனைக்கு மத்தியில், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் மத்திய நீர் ஆணையத்தால் இறுதி செய்யப்பட்ட மேல் நீர்மட்ட விதியின்படி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்து வருவதாக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட, கண்காணிப்பு குழு பலமுறை உத்தரவிட்டும் கேரள அரசால் அனுமதிக்கப்படவில்லை. அனுமதி தவிர்க்கப்படுகிறது. அக்டோபர் 26 அன்று நடைபெற்ற கூட்டத்தில், கேரள அரசு சாலை பராமரிப்பு மற்றும் அணையை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள நிலுவையில் உள்ள அனைத்து வன அனுமதியையும் விரைவுபடுத்த ஒப்புக்கொண்டது, என்று தமிழக அரசு கூறியது. ஆனால், நவம்பர் 5 தேதியன்று கேரள முதன்மை காடுகளின் தலைமைப் பாதுகாவலர் (PCCF) மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் ஆகியோரிடமிருந்து மரங்கள் வெட்டப்படுவதற்கான அனுமதி உத்தரவு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலும், அனுமதி முடக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாகவும், 2014ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பணியை செயல்படுத்தாமல் தடுத்ததாகவும் தமிழக அரசு கேரள அரசு மீது குற்றம் சாட்டியது. 2006 பிப்ரவரியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு 16 ஆண்டுகளுக்கும் மேலாக பேபி அணையை வலுப்படுத்தும் பணியை கேரளா வெற்றிகரமாக தடுத்துள்ளது என்று தமிழக அரசு கூறியது.

முல்லைப் பெரியாறு அணையில் 2000-ம் ஆண்டு முதல் மின் இணைப்பு தொடர்பாக பலமுறை கேட்டும், 2021 ஆண்டிலும் பழைய நிலையே தொடர்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்வரத்து முன்னறிவிப்பு அமைப்பிற்காக மழை அளவீட்டு நிலையங்களை நிறுவ கேரளா 2015 இல் ஒப்புக்கொண்டாலும், 2020 இல் தான் நிறுவியது. ஆனால் இன்றுவரை தரவுகளைப் பகிரவில்லை. தமிழ்நாடு நிறுவியுள்ள தனிக்கொடி மற்றும் முல்லைக்கொடி மழைப்பொழிவு நிலையங்களில் இருந்து தொடர்ந்து தகவல்களை சேகரிக்க கேரளா அனுமதிக்கவில்லை.

கேரள அரசு மற்றும் கேரளாவைச் சேர்ந்த மனுதாரர்கள் தொடர்ந்து, தற்போதுள்ள அணையை நீக்கிவிட்டு புதிய அணையைக் கட்டக் கோரி மனு தாக்கல் செய்து வருகின்றனர். இது அணையின் பாதுகாப்பு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாக உள்ளது. 2006, 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மூன்று உத்தரவுகளை சுட்டிக்காட்டி, “அணை நீரியல் ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும், நில அதிர்வு ரீதியாகவும் பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு கூறியது. நீதிமன்ற உத்தரவுகளின்படி பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்பார்வைக் குழு தொடர்ந்து பரிந்துரைத்துள்ளது என்றும் தமிழக அரசு கூறியது.

தமிழ்நாடு தயாரித்துள்ள வளைவு விதியை மேற்பார்வைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், மேலும் நில அதிர்வு மண்டலம் – III இல் அமைந்துள்ள அணையின் வயதைக் கருத்தில் கொண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கேரளாவின் வாதத்திற்கு, அணை அமைந்துள்ள மண்டலத்தில் ஏற்படக்கூடிய நில அதிர்வு தொடர்பாக மத்திய அரசு நிறுவனமான புனேவில் உள்ள மத்திய நீர் சக்தி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் அணை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பாதுகாப்பானது என்று கண்டறியப்பட்டது, என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு முன் உலகில் கட்டப்பட்ட அணைகளின் பட்டியலை சமர்ப்பித்த தமிழக அரசு, அணையின் பலம் குறித்து 2000-ம் ஆண்டு நிபுணர் குழுவும், பின்னர் 2010 உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் பெற்ற குழுவும், சோதனை மற்றும் ஆய்வுகளை நடத்தி, அணை கட்டுமானத்தின் அடர்த்தி மற்றும் அணையின் எடை குறைவதற்கான எந்த அறிகுறியும் காட்டப்படவில்லை என்பதை நிரூபித்தது என்று கூறியது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-told-sc-on-kerala-blocking-mullai-periyar-dam-strengthen-works-369126/

Related Posts: