15 12 2021 இந்தியா முழுவதும் பெரும்பாலான பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் நிறுவன சிஇஓ ஆதார் பூனாவாலா, 3 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு அடுத்த 6 மாதங்களில் தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
27ஆவது சிஐஐ மாநாட்டில் பங்கேற்று பேசிய ஆதார் பூனாவாலா, “3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி அடுத்த 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி பரிந்துரைக்கப்படவில்லை. அதன் காரணமாக, Covovax தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளது. மூன்று வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பரிசோதனையில் உள்ள இந்த தடுப்பூசி நல்ல செயல்திறன் கொண்டிருக்கிறது.
குழந்தைகளிடம் ஒமிக்ரானின் தாக்கம் இன்னும் காணப்படவில்லை. அவர்களின் உடல், செல்கள் மற்றும் நுரையீரல்கள் நன்றாக குணமடைகின்றன என்று நினைக்கிறேன.
தற்போது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த இரண்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அவை பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்கிற அரசின் அறிவிப்பு வரும் வரை காத்திருந்திருங்கள். அறிவிப்பு வரும் பட்சத்தில், பயமின்றி குழந்தைகளுக்கு செலுத்திக்கொள்ளுங்கள். எங்கள் நிறுவன தடுப்பூசி ஆறு மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.
CDSCO, 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் அவசரகால சூழ்நிலைகளில் காடிலா ஹெல்த்கேரின் ZyCoV-Dக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக ஜூலை மாதம், CDSCO-வின் நிபுணர் குழு, சில நிபந்தனைகளுடன் 2 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு Covovax இன் 2/3 கட்ட சோதனைகளை நடத்துவதற்கு சீரம்-க்கு அனுமதி வழங்க பரிந்துரைத்தது. சீரம் தற்போது 3-17 வயதுக்குட்பட்ட 920 குழந்தைகளிடம் 2/3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறது.
அதே போல், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் சமர்ப்பித்த 2 முதல் 18 வயதுடைய தன்னார்வலர்களின் இடைக்கால 2/3 மருத்துவ பரிசோதனை தரவுகளின் அடிப்படையில் கோவாக்சினுக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரையை ஆய்வு செய்து வருகிறது.
பயோலாஜிக்கல் இ நிறுவனமானது, 5-18 வயதுக்குட்பட்ட 624 குழந்தைகளில் SARS-CoV-2 மரபணுவின் 2/3 மருத்துவ பரிசோதனைகளை நடத்துகிறது. மேலும், ஜான்சன் & ஜான்சன் தனது ‘Ad.26COV.2S’ தடுப்பூசியின் 2/3 கட்ட மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் 12-17 வயதுக்குட்பட்டவர்களில் உலகளாவிய மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக நடத்தி வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் 134.57 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 82.07 கோடி முதல் டோஸ்களும், 52.49 கோடி இரண்டாவது டோஸ்களும் ஆகும்.
source https://tamil.indianexpress.com/india/covid-shot-for-kids-above-3-years-will-be-ready-in-6-months-adar-poonawalla-383348/