வியாழன், 16 டிசம்பர், 2021

தமிழகத்திலும் கால் பதித்த ஒமிக்ரான்; ஒருவருக்கு தொற்று உறுதி

 16 12 2021 traveller with Omicron variant to fly out, Karnataka, India

தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் புதிய மாறுபாடான ஒமிக்ரான், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் முதன்முதலில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜிரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதுடைய ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. நைஜீரியாவில் இருந்து வந்த நபரோடு தொடர்பில் இருந்த மேலும் 7 பேருக்கு புதிய வகை கொரோனா இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  ஒமிக்ரான் தொற்று உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்று அமைச்சர் கூறினார்.

மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-detects-first-case-of-omicron-383793/