மழைநீர் தேங்கியுள்ள கட்டிடத்தில் இருந்து விசிக தலைவர் திருமாவளவனை கால் நனையாமல், விசிக தொண்டர்கள் அவரை இரும்பு நாற்காலியில் நிற்கவைத்து கார் வரை தள்ளிச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருமாவளவன் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் தண்ணீர் தேங்கியுள்ள கட்டிடத்தில் இருந்து வெளியே உள்ள தனது காரில் சென்று புறப்படுவதற்கு முயன்றபோது, விசிக தொண்டர்கள், ஷூ அணிந்திருந்த திருமாவளவன் கால்கள் மழை நீரில் நனையக்கூடாது என்பதற்காக அவரை அங்கே இருந்த இரும்பு நாற்காலிகளில் நிற்கவைத்து இரும்பு நாற்காலியை கார் அருகே தள்ளிச் சென்று விடுகிற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.
சிலர் அந்த வீடியோவைக் குறிப்பிட்டு, எளிய மக்களின் தலைவர் என்று கூறும் திருமாவளவன் மழை நீரில் கால் நனையாமல் இருக்க வேண்டும் என்று தொண்டர்களை தூக்கிச்செல்ல வைத்துள்ளார் என்று சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்தனர். மேலும், சிலர், விசிகவில் பலரும் திருமாவளவன் மீது ஒரு ரசிக மனநிலையில் இருக்கிறார்கள். திருமாவளவன் அதை ஊக்குவிக்கிறார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் வசித்து வருகிறார். நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து திகைத்தார். இதையடுத்து, விசிக தொண்டர்கள் அவரை தங்களது தோளில் தூக்கி செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இதை திருமா ஏற்காமல் மறுத்துவிட்டார். பின்னர், அங்கே சில இரும்பு நாற்காலிகள் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டிருந்ததைப் தொண்டர்கள் பார்த்தனர். காத்திருப்பவர்கள் அமர்வதற்காக இது போன்ற நாற்காலிகள் அங்கே இருந்தது. அந்த நாற்காலிகளை பயன்படுத்தி திருமாவளவன் மீது தண்ணீர் படாமல் அழைத்துவர தொண்டர்கள் முயற்சி செய்தனர்.
தொண்டர்கள் திருமாவளவனை இரும்பு நாற்கலிகள் மீது நிற்க வைத்து அந்த இரும்பு நாற்காலியை தள்ளிக் கொண்டே வந்தார்கள். பிறகு, கார் நிற்கும் இடம் வரை அந்த நாற்காலியில் திருமாவளவன் நின்றுகொண்டே வந்தார். பின்னர், திருமாவளவன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்த வீடியோ சர்ச்சை குறித்து விசிக-வைச் சேர்ந்த வன்னியரசு ஊடகங்களிடம் கூறுகையில், “வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் தலைவர் திருமாவளவன், கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு போல, இந்த ஆண்டும் கீழ் தளத்தில் தண்ணீர் தேங்கியது. ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம். ஆனால், அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார். முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக தம்பிகள் நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.” என்று கூறினார்.
இந்த நிலையில்தான், இந்த சர்ச்சை வீடியோ குறித்து, என் மீதும் என் இயக்கம் மீதும் களங்கம் ஏற்படுத்தவே வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். திருமாவளவன் கூறுகையில், “என் மீதும், என் இயக்கம் மீதும் களங்கம் ஏற்படுத்தவே வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. நான் தங்கி இருப்பது அறக்கட்டளை, வீடு அல்ல; மழை நேரங்களில் அந்த இடத்தில் சாக்கடை சூழ்ந்து கொள்ளும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-clarification-on-his-controversy-video-376723/