சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம், விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பது குறித்த கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியது.
விழுப்புரத்தில் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் மினாரம் தாக்கி பலியான சம்பவத்தைக் குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாகப் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரியும், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டை வழங்கக் கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், தமிழ்நாடு அரசு, திமுக உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று (நவம்பர் 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் பேனர்கள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளதால், பேனர்கள் வைக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததையும், அவர் முதல்வர் பதவியேற்றபோது பேனர் வைப்பது தவிர்க்கப்பட்டதாகவும் வாதிட்டார். மேலும், விழுப்புரத்தில் பலியான சிறுவனை பணிக்கு அமர்த்தியது ஒப்பந்ததாரர்தான் எனவும், அவர் தரப்பில் பலியான சிறுவனின் குடும்பத்துக்கு 1.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டதையும் தற்போது அவர் ஜாமீனில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்தச் சட்டம் உள்ளதாகவும், அதன்படி விதிகளை மீறி செயல்படுபவர்களுக்குச் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வழக்கறிஞர்களின் பதிலைக் கேட்ட பின்னர், நீதிபதிகள், கூறுகையில், “சட்டவிரோத பேனர் வைக்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சி மட்டுமல்லாமல், அனைத்து கட்சிகளையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். பேனர் வைக்கும் நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொள்ள மாட்டார் என கூறுவது மட்டும் போதாது. கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது” என்று தமிழக அரசு அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/madras-hc-order-action-should-be-taken-if-the-banner-is-placed-in-violation-of-the-rules-376733/