Winter Session : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. 12 நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த இடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இன்று பகல் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முயற்சி செய்தார். ஆனால் அவர் பேச அனுமதி மறுக்கப்படவே அவர் அவையில் இருந்து வெளியேறினார்.
நீதி வேண்டும் என்று போராட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது என்று உத்தரவு பிறப்பித்தார் அவைத் தலைவர் வெங்கைய நாயுடு. ஆனாலும் அவர்கள் மேலும் குரல் எழுப்பவே, இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பிக்களும் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் அவர்கள் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்று அவர் கூறினார். மல்லிகார்ஜுன கார்கேவைத் தொடர்ந்து அவை உறுப்பினர்கள் பலரும் வெளிநடப்பு செய்தனர்.
காந்தி சிலையில் இருந்து விஜய் சோக் வரை பேரணியில் சென்ற எதிர்க்கட்சியினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் “தொடர்ந்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட வண்ணமே இருக்கின்றன. ஆனால் நாடாளுமன்றம் இப்படி நடைபெற கூடாது. அவைக்கு பிரதமர் வரவே இல்லை. அதே போன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களை பேசவும் எங்களை அனுமதிக்கவில்லை. இது ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியாகும்” என்று கூறினார்.
நாடாளுமன்றம் ஒரு அருங்காட்சியம் போல இருக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த ராகுல் காந்தி எப்போதெல்லாம் எதிர்க்கட்சியினர் விவாதங்களை முன்வைக்கின்றோமோ அப்போதெல்லாம் ஒடுக்கப்படுகிறோம். இந்த அரசு பிரச்சனைகள் தொடர்பான எங்களின் விவாதங்களை எழுப்பவே விடுவதில்லை. இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் இங்கே உள்ளனர். இது தான் இந்நாட்டின் ஜனநாயகத்தின் அடையாளங்கள். இது தான் இந்திய மக்களின் குரலை நசுக்கும் அடையாளங்கள். இரண்டு வாரங்களுக்கும் மேலாக இவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவைக்கு வெளியே அவர்கள் அமர்ந்துள்ளனர். அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/winter-session-democracy-being-killed-oppn-not-allowed-to-raise-issues-says-rahul-gandhi-383118/ , ANI