முதுகுளத்தூர் அருகே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் போலீஸ் சித்தரவதையால் உயிரிழந்ததாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், மணிகண்டன் மரணத்திற்கும் போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவர் கமுதி கோட்டைமேட்டில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அண்மையில், போலீசாரால் விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த மணிகண்டன் திடீரென உயிரிழந்தார்.
இதையடுத்து, மணிகண்டன் காவல் நிலையத்தில் போலீசார் சித்திரவதை செய்ததால்தான் உயிரிழந்தார் என்று மணிகண்டனின் பெற்றோர் புகார் தெரிவித்ததால் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால், காவல்துறையினர், மணிகண்டனை போலீசார் தாக்கவில்லை என்று தெரிவித்தனர்.
மணிகண்டன் மரணத்துக்கு போலீஸ் சித்திரவதைதான் காரணம் என்று கூறப்பட்டதையடுத்து மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மணிகண்டனின் மரணம் குறித்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் கூறுகையில், மணிகண்டனின் மரணம் குடும்ப உறுப்பினர்கள் கூறுவதுபோல போலீஸ் சித்திரவதை அல்லது உடல் ரீதியான தாக்குதல் காரணமாக இல்லை. முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை கூட அத்தகைய குறியீடுகளை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால், மணிகண்டன் போலீஸ் சித்திரவதையால்தான் உயிரிழந்தார் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மணிகண்டனின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மணிகண்டன் உடல் மறு பிரதேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ஏடிஜிபி தாமரைக் கண்ணன், மணிகண்டன் மரணத்திற்கும் போலீசாருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் விஷம் குடித்து உயிரிழந்திருப்பதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஏடிஜிபி தாமரைக் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது, அவரை விசாரித்தது, அதே போல அவருடைய தாயார் மற்றும் உறவினர் வந்தது அவர்களிடம் விசாரணை நடத்தியது, பிறகு அவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டு, மணிகண்டனை நல்லமுறையில் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனது என அனைத்தும் காவல் நிலையத்தில் உள்ள பல சிசிடிவி கேமிராவில் வீடியோக்களில் பதிவாகியுள்ளது. அன்று இரவு அவர் வீட்டுக்கு போனபிறகு, நள்ளிரவில் அவர் இறந்துவிடுகிறார். மறுநாள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்படுகிறது. அவருடைய தம்பி அலெக்ஸ் பாண்டியன் புகார் அளிக்கிறார். அவர் புகார் கொடுக்கும்போது காவல்துறையினர் மீதும் புகார் கொடுக்கிறார். அதனால், அந்த விசாரணையை டி.எஸ்.பி அளவில் நடத்தப்பட்டது. போலீசார் மீது புகார் என்பதால் பரமக்குடி ஆர்டிஓ இணைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மறுபடியும் பிரேதப் பரிசோதனை செய்கிறார்கள். அந்த பிரேதப் பரிசோதனையும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அவருடைய உடல் உறுப்புகள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனையின் இறுதி அறிக்கையை அளித்திருக்கிறார்கள். அதன்படி, மணிகண்டன் விஷம் அருந்தி இறந்துள்ளார் என்று தெளிவாக இறுதி முடிவை தடய அறிவியல் துறையினர் கொடுத்திருக்கிறார்கள். இதிலிருண்து மணிகண்டன் காவல் துறை தாக்கியோ அல்லது அடித்தோ அவர் இறக்கவில்லை என்பது தெளிவாக இந்த விசாரணையில் இருந்து தெரியவருகிறது” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/adgp-press-meet-on-mudukulathur-student-death-case-383306/