3 12 2021
Coronavirus omicron impact new rules for school in Tamilnadu Tamil News : ஏராளமான கொரோனா மாறுபாடுகளுக்கு இடையில் சமீபத்தில் உலகெங்கிலும் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் எனும் புதிய கொரோனா மாறுபாட்டு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் முதல் முறையாக நேற்று இரண்டு பேருக்கு இந்த ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு பள்ளிகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளைப் பரிந்துரை செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இரண்டு பேருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்படுத்தியிருப்பதை அடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவாடிக்கைகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டிற்குள் இன்னும் பரவவில்லை என்று உறுதியளித்தார்.
மேலும், தமிழ்நாடு பள்ளிகளில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில், வேகமாகப் பரவும் ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்குள் நுழையும் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை இருக்கும் மாணவர்களை அனுமதிக்கத் தடை. அதேபோல, கட்டாயம் ஆசிரியர்கள் மாஸ்க் அணிந்து அவர்களின் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை இனி தவிர்க்க வேண்டும். முன்பு பின்பற்றியதை போல, வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசால் வழங்கப்பட்ட இந்த வழிகாட்டுதல்களை அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், நீச்சல் குளங்கள் உள்ள பள்ளிகள் அவற்றை மூட வேண்டும் என்றும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது அவசியம். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம் என்று மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/coronavirus-omicron-impact-new-rules-for-school-in-tamilnadu-tamil-news-378096/