2 12 2021
ஒமிக்ரான் கொரோனா காரணமாக சர்வதேச பயணிகளுக்கு இந்தியாவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோவிட் விதிமுறைகள் தொடர்பாக மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசு இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பயணிகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் மத்திய விதிமுறைகளுடன் “மாறுபட்டவை” என்று அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாகாராஷ்டிரா அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கு
இதுகுறித்து மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் தேபாஷிஷ் சக்ரவர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், ” தற்போதைக்கு மாநில அரசு, வழிகாட்டுதலில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாது. பேரிடர் மேலாண்மைச் சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டத்தின் கீழ், வைரஸ் பரவுவதைத் தடுக்க கூடுதல் நிபந்தனைகளை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, அதன்படி சர்வதேச பயணிகளுக்காக வெளியிடப்பட்ட தற்போதைய வழிகாட்டுதல்களை திருத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளது” என தெரிவித்தார்.
ஆனால், சில கட்டுப்பாடுகளுடன் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அறிவுரை தான் கட்டளை கிடையாது
மேலும் பேசிய சக்ரவர்த்தி, ” மத்திய மையம் கூறுவது அறிவுரை மட்டுமே. அவை கட்டளை கிடையாது. கவனிக்க வேண்டிய அடிப்படைத் தேவைகள் உள்ளன, அவற்றை நாங்கள் பின்பற்றுகிறோம். எதிர்காலத்தில், அப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், அவற்றை பரிசீலிப்போம்” என தெரிவித்தார்.
முன்னதாக புதன்கிழமை, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், சர்வதேச பயணிகளுக்காக மாநிலம் இயற்றிய நான்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட SoP கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் வேறுபடுகின்றன என்று மகாராஷ்டிரா கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் பிரதீப் குமார் வியாஸுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மாநில அரசின் வழிகாட்டுதலில் மத்திய மையம் கண்டறிந்த 4 வேறுபாடுகள்
- மும்பை விமான நிலையத்தில் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கட்டாய RT-PCR சோதனை. ஆனால், மத்திய அமைச்சகம் ஆபத்தான நாடுகள் பட்டியிலில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே ஆர்டி-பிசிஆர் சோதனை செய்கிறது.
- அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் கட்டாயம் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தல். ஆனால், மத்திய மையம் ஏழு நாட்கள் என குறிப்பிட்டுள்ளது.
- மும்பையில் இறங்கிய பிறகு இணைப்பு விமானங்களில் பயணிக்கத் திட்டமிடும் பயணிகளுக்கு கட்டாய RT-PCR சோதனை. அதில், நெகட்டிவ் வந்தால் மட்டுமே, அடுத்த விமானத்தில் பயணிக்க முடியும். ஆனால், மத்திய மையத்தில் இப்படி ஒரு கட்டுப்பாடு கிடையாது
- பிற மாநிலங்களிலிருந்து மகாராஷ்டிராவுக்குப் வரும் உள்நாட்டுப் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு எடுத்த ஆர்-பிசிஆர் சோதனையின் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். ஆனால், இத்தகைய கட்டுப்பாடு மத்திய மையத்தால் வெளியிடப்படவில்லை
கோவிட் தொடர்பான பிரச்சினைகளில் மத்திய அரசும் மகாராஷ்டிராவும் வேறுபடுவது இது முதல் முறை அல்ல.குறிப்பாக தடுப்பூசி பற்றாக்குறை மற்றும் போதுமான மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகம் இல்லாத சமயங்களில் மாறுபாடான கருத்தை கொண்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, ஒமிக்ரானின் பரவலை தடுக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆபத்து பட்டியலில் உள்ள நாட்டின் பயணிகளுக்கு ஐந்து கட்டுப்பாடுகளை விதித்தது.
- சர்வதேச பயணிகள் வந்திறங்கும் இடத்தில் கோவிட் பரிசோதனைக்காக மாதிரிகளை சமர்பிக்க வேண்டும். இணைப்பு விமானத்தில் புறப்படுவதற்கு முன்பு, சோதனை முடிவுக்காக காத்திருக்க வேண்டும்
- சோதனை முடிவு நெகட்டிவ் என்றாலும், ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்
- சோதனை முடிவு பாசிட்டிவாக இருக்கும் பட்சத்தில், அவர்களது மாதிரி INSACOG ஆய்வகத்திற்கு மரபணு சோதனைக்காக அனுப்ப வேண்டும்.
- பாசிட்டிவ் ஆன நபர்களை தனிமைப்படுத்தி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய வேண்டும்
- பாதிப்பு உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள், வீட்டு தனிமை அல்லது தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட வேண்டும்.
ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் நாடுகள் உள்ளன.
கூடுதலாக, ஆபத்தில் உள்ள நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் மொத்த பயணிகளில் இரண்டு சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவின் கோவிட் பணிக்குழுவின் மூத்த அதிகாரி கூறுகையில், “வைரஸ் ஏற்கனவே 10 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளதால், ஆபத்தில் உள்ள நாடுகளை மட்டும் கண்காணிப்பது பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. அனைத்து பயணிகளுக்கும் ஆர்டி-பிசிஆர் செய்வது சிறந்த பாதுகாப்பை உறுதி செய்யும்” என்றார்.
source https://tamil.indianexpress.com/india/maharashtra-announces-new-covid-norms-says-no-to-centre-missive/