ஞாயிறு, 12 டிசம்பர், 2021

சென்னை, தஞ்சாவூர் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

 12 12 2021 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஆகிய இரு பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இதன்படி டாக்டர் வி திருவள்ளுவன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், டாக்டர் எம் சுந்தர் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பொறுப்பேற்க உள்ளனர். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகள் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் திருவள்ளுவன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பொறுப்பேற்கவுள்ள டாக்டர் வி திருவள்ளுவன், தற்போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மொழியியல் உயர்நிலை ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

28 ஆண்டுகள் ஆசிரியர் அனுபவம் கொண்ட இவர் ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிகழ்வுகளில் நான்கு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். மற்றும் ஐந்து சர்வதேச கல்வி ஆராய்ச்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார்.

துணைவேந்தர் சுந்தர்

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் சுந்தர் தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி முதல்வராக பணிபுரிகிறார். 26 ஆண்டுகள் ஆசிரியர் பணி அனுபவம் உள்ள இவர், 11 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

டாக்டர் சுந்தர்

விளையாட்டு துறையில் தொழில்நுட்ப அதிகாரி, டிராக் ரெஃப்ரி, இந்திய பயிற்சியாளர் மற்றும் அணியின் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். 20வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 19வது காமன்வெல்த் உட்பட பல்வேறு விளையாட்டு தொடர்களுக்கு இந்திய அணியை அழைத்துச்சென்றுள்ளார். மேலும், ஏழு புத்தகங்களை எழுதியுள்ள இவர் சர்வதேச நிகழ்வுகளில் 25 கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.

இவருக்கு விளையாட்டுத் துறையில் சிறந்தவர்களுக்கான இந்திய அஞ்சல் துறையின் “மை முத்திரை” விருது கடந்த 2019ல் வழங்கப்பட்டது. இந்திய கலாச்சார மேம்பாட்டு அமைப்பின் மகாத்மா காந்தி விருதை 2009ம் ஆண்டு பெற்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-news-in-tamil-tn-governor-rn-ravi-appoints-vcs-for-2-universities-382036/

Related Posts: