12 12 2021 ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஒவ்வொரு துறையை குறித்தும் பகிரப்படும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை சரிபார்க்க, சமூக ஊடக நோடல் அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நோடல் அதிகாரிகளுடன் முதல்வரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு நோடல் அலுவலரும் தங்களின் வாட்ஸ்அப் எண், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் கணக்கு ஐடிகளை தகவல் துறைக்கு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையினர், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பகிரப்படும் அரசு துறை தொடர்பான செய்திகுறிப்புகளை சரிபார்த்து, அதில் விமர்சனம் மற்றும் எதிர்மறையான செய்திகளை குறிப்பெடுத்து அந்தந்த துறை செயலாளர், தலைவர், மாவட்ட ஆட்சியர் தினமும் காலை 8 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அதனை நோடல் அதிகாரிகள் சரிபார்த்து மதியம் 2 மணிக்கு முன்னதாக பொருத்தமான பதில் அல்லது மறுபிரதியை தயார் செய்ய வேண்டும். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்களில் அதற்கு பதிலோ அல்லது மறுபிரதியை வெளியிடவும், ஒளிப்பரப்பவும் தகவல் துறை நடவடிக்கை எடுக்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட செய்தியின் நகலை காலை 9.30 மணிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பகிரப்படும் எதிர்மறையாக செய்திகளை அனுப்பவும், நடவடிக்கை அறிக்கையைப் பெறவும், மறுபிரிதியை வெளியிடவும் அனைத்துச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் ஆட்சியர்களுக்கு இரண்டு பிரத்யேக மொபைல் எண்களை தகவல் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-govt-to-nominate-social-media-nodal-officers-to-do-fact-check/