கொரோனா இரண்டாம் அலையின் சீற்றம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா பிறழ்வு ஒமிக்ரான் மீண்டும் உலக அளவில் பெரும் அச்சத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மருத்துவமனைகள் ஒமிக்ரான் பரவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஒமிக்ரான் மாறுபாட்டிற்கான சிகிச்சையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதர கொரோனா தொற்றுகளுக்கு வழங்கப்பட்டு வரும் அதே சிகிச்சை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பிய 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் கிங்க்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடல் நிலை தேறி வருவதாகவும் எந்தவிதமான ஆரோக்கிய சீர்கேடுகளும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
கிங்க்ஸ் மட்டுமின்றி, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளாது. சர்வதேச பயணம் மேற்கொண்டு பாசிடிவ் முடிவுகளை பெற்ற பயணிகள் இங்கே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும் என்றூ கூறப்பட்டுள்ளது. இத மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதுமான படுக்கை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகளை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச பயணங்கள் மேற்கொண்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலையில் அவர்களுக்காக 200 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி 8700 ஐ.சி.யு படுக்கைகள், 40 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 27 ஆயிரம் ஆக்ஸிஜன் அற்ற படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் இது குறித்து குறிப்பிடுகையில், இதர கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளே ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழங்கப்படுகிறது. மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஒமிக்ரானுக்கு சிகிச்சை அளிக்க போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/omicron-variant-special-wards-have-been-readied-at-government-hospitals-in-tamil-nadu-379192/