சனி, 4 டிசம்பர், 2021

ஒமிக்ரானுடன் தென்னாப்பிரிக்கர் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி? கர்நாடக அரசு தீவிர விசாரணை

 traveller with Omicron variant to fly out, Karnataka, India

traveller with Omicron variant to fly out : இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் இரண்டு நபர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்க பயணிக்கு வழங்கப்பட்ட கொரோனா தொற்று நெகடிவ் சான்றின் உண்மைத் தன்மையை ஆராயும் பொருட்டு காவல்துறையிடம் புகார் அளிக்கும்படி பெங்களூரு மாநகராட்சிக்கு கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

66 வயது மதிக்கத் தக்க தென்னாப்பிரிக்கர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 7 நாட்களில் தனியார் ஆய்வகத்தில் சோதனை செய்து நெகடிவ் சான்று பெற்று இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தியாவை விட்டு வெளியேறும் வகையில் தென்னாப்பிரிக்கர் எப்படி நெகடிவ் சான்றினை பெற்றார் என்பதை அறிய காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோக் வெள்ளிக்கிழமை அன்று, முதல் அமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பிறகு கூறினார்.

நவம்பர் 20ம் தேதி அன்று பெங்களூருக்கு வந்த தென்னாப்பிரிக்க பயணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மத்திய பெங்களூரில் அமைந்திருக்கும் நட்சத்திர விடுதி ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். நவம்பர் 23ம் தேதி அன்று தனியார் ஆய்வகத்தில் இருந்து கொரோனா நெகடிவ் அறிக்கையைப் பெற்ற அவர் துபாய் வழியாக தென்னாப்பிரிக்காவுக்கு நவம்பர் 27 அன்று பயணமானார்.

தனியார் மருத்துவ பிரதிநிதியான அந்த தென்னாப்பிரிக்க பயணியிடம் இருந்து பெறப்பட்ட மாதிரியை மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி பெறப்பட்ட முடிவுகளில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதை கர்நாடக அரசு வியாழக்கிழமை அன்று உறுதி செய்தது.

நிலைமை இங்கு தவறாக கையாளப்பட்டுள்ளது. சரியான முறையில் தான் பரிசோதனை முடிவுகள் தனியார் ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 வயதுடைய நபர் தென்னாப்பிரிக்காவில் இருந்து நவம்பர் 20ம் தேதி அன்று வந்தார். அவருக்கு நோய் அறிகுறிகள் ஏதும் இல்லை. விமான நிலையத்தில் அவருடைய மாதிரிகள் பெறப்பட்டு சோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நவம்பர் 23ம் தேதி அன்று அவருக்கு சோதனை முடிவுகள் நெகடிவ் என அவர் நவம்பர் 27ம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவிற்கு திரும்பி சென்றுவிட்டார் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறினார். நபரின் 24 முதன்மை தொடர்பாளர்கள் மற்றும் 240 இரண்டாம் தொடர்பாளர்களுக்கு கொரோனா நெகடிவ் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.

இந்த தென்னாப்பிரிக்கரை தொடர்ந்து 46 வயது மதிக்கத்தக்க மருத்துவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சர்வதேச பயணங்கள் எதையும் சமீபத்தில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2 ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் கர்நாடக அரசு அறிவித்தபடி, கோவிட்-19 வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவரின் ஐந்து தொடர்புகளுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களின் மாதிரிகளும் மரபணு வரிசைமுறைக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/karnataka-to-probe-covid-report-that-allowed-traveller-with-omicron-variant-to-fly-out-378406/