சனி, 4 டிசம்பர், 2021

‘ஆபத்தான நாடுகளிலிருந்து’ இந்தியா வந்த 12 பயணிகள் தனிமைப்படுத்தல்; 8 பேருக்கு கொரோனா

 ஆபத்தான நாடுகள் என வகைப்படுத்தப்பட்டு இருக்கக் கூடிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த 12 பேர், லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதில், எட்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நால்வருக்கு வறண்ட தோண்டை, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ இயக்குநர் டாக்டர் சுரேஷ் குமார் கூறுகையில், ” விமான நிலைய அதிகாரிகள் பரிந்துரை பேரில், ஆபத்தான நாடுகளில் இருந்து வந்த 12 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சோதனை முடிவுகள் வரவில்லை. அதற்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் ஆகும்” என்றார்.

இந்த வார தொடக்கத்தில், கொரோனா வைரஸின் புதிய ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவமனையை டெல்லி அரசு தயார் செய்தது.

மையத்தின் கூற்றுப்படி, ஆபத்தான நாடுகளாக இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் பட்டியலிப்பட்டுள்ளது.

தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கையின்படி, ஆபத்தான நாடுகள் பட்டியலில் உள்ள பயணிகள் இந்தியா வந்ததும் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் முடிவுகள் வந்தபிறகு மட்டுமே, விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். கூடுதலாக, பிற நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகளில் 5 சதவீதம் பேர் ரேண்டமாக சோதனை செய்யப்படுகிறார்கள்.

source https://tamil.indianexpress.com/india/12-from-at-risk-countries-admitted-at-lok-nayak-hospital-eight-have-covid/