31 8 2022
தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி. நாடு முழுவதும் நிலங்களை வைத்து மோசடி செய்த பி.ஏ.சி.எல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலங்களை பதிவு செய்த பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாடு முழுவதும் நிலங்களை வைத்து மோசடி செய்த பி.ஏ.சி.எல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலம். சென்னை அண்ணாநகரை சேர்ந்த வரதராஜ் என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “2018 ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக நிலங்கள் பத்திரப்பதிவு செய்துள்ளது தொடர்பாக புகாரில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்திரப்பதிவு துறையின் கூடுதல் ஐஜி கே.வி சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கூட்டுச்சேர்ந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பி.ஏ.சி.எல் என்ற நிறுவனம் நாடு முழுவதும் 6 கோடி முதலீட்டாளர்களிடம் நிலம் வழங்குவதாக 49 ஆயிரம் கோடி பணத்தை பெற்று மோசடி செய்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி அமைத்து இந்த நிறுவனம் மோசடி செய்து வைத்திருக்கும் நிலங்களை விற்பனை செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்த உத்தரவு பிறப்பித்தது.
அந்த அடிப்படையில் இந்த நிறுவனம் தொடர்பான நிலங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இந்த நிறுவனம் தொடர்பான நிலங்களை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என லோதா கமிட்டியிலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு கடந்த மே மாதம் 2018ஆம் ஆண்டு தமிழக தலைமை செயலாளர் மற்றும் வருவாய்த்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவையும், கமிட்டியையும் மீறி தமிழகத்தில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கடிதம் அனுப்பப்பட்ட பிறகும் மதுரையை சேர்ந்த சார் பதிவாளர் பி.ஏ.சி.எல் தொடர்பான நிறுவனத்திற்கு சாதகமாக 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்ததின் அடிப்படையில் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலத்தரகர் ரவிசந்திரன் என்பவர் கூடுதல் ஐஜியுடன் கூட்டுச்சேர்ந்து பிஏ.சி.எல் நிலங்களை விற்க மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கூடுதல் ஐஜி சீனிவாசன் 2019ஆம் ஆண்டு பி.ஏ.சி.எல் நிறுவனத்திற்கு தொடர்பான நிலங்களை விற்க சட்டவிரோதமாக சான்று கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இதை பயன்படுத்தி தான் பி.ஏ.சி.எல் தொடர்பான நிலங்கள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த நிறுவனத்திற்கு தொடர்பான 8,198 சொத்து ஆவணங்கள் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் 33 சொத்து ஆவணங்கள் திருநெல்வேலி, விருது நகர், தூத்துக்குடி,தென்காசி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் 609 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி சீனிவாசன் பத்திரப்பதிவு செய்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு பத்திரப்பதிவு ஐஜியாக இருந்த குமரகுரு பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகு அந்த பொறுப்பை கூடுதல் ஐஜி சீனிவாசன் பெற்ற பிறகு இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தரகர்களாக பத்ம நாபன், ரவிசந்திரன், ராஜ்குமார் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் வணிகவரித்துறை அதிகாரி சிவக்குமார், பத்திரப்பதிவு துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி ஆகியோர் முன்னாள் அமைச்சரோடு இணைந்து மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு உயரதிகாரிகளுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக சென்னை சாந்தோமில் உள்ள கூடுதல் ஐஜி சீனிவாசன் அலுவலகத்தில் தரகர்கள் சர்வ சாதாரணமாக இந்த மோசடி விவகாரத்தில் வந்து பேரம் பேசியதும், ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டபோது அரசு உயரதிகாரிகள் கண்டுக்கொள்ளாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. தரகர்கள் வந்து சென்றதற்கான போட்டோக்கள், சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பி.ஏ.சி.எல் நிறுவனம் 300கோடிக்கு மேல் லஞ்சம் கைமாறி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில் கூடுதல் ஐஜி சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின ஆனால் பி.ஏ.சி.எல் நிறுவனத்தின் நிலங்களை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்திலேயே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உரிய ஆதாரங்களை திரட்டும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், அதனடிப்படையில் கூடுதல் ஐஜி சீனிவாசனை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதல் ஐஜி சீனிவாசனை அழைத்து விசாரித்தால் முன்னாள் அமைச்சர்கள்,பத்திரப்பதிவு அதிகாரிகள் சிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
source https://news7tamil.live/deed-registration-ig-registered-lands-in-tamil-nadu-in-violation-of-supreme-court-order.html