
மேற்கு வங்க பிரதமர் மம்தா பேனர்ஜ் ‘எதிர்க்கட்சிகள் ஒரேதளத்திற்கு வந்திருக்கின்றனர். 2019ல் நிச்சயம் மாற்றம் வரும்” என்று தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ உச்சக்கட்ட சர்வாதிகாரம் நாட்டில் நடக்கிறது. யாராவது எதாவது சொன்னால் அவர்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறையும், சி.பி.ஐ-யும், வருமான வரித்துறையும் அனுப்பப்படுகிறது. இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் எப்படி பலமுடன் இருக்க முடியும்? எல்லோருமே அச்சுறுத்தப்படுகிறார்கள்” என்று பாஜக அரசை அவர் விமர்சித்தார்.
பாஜக அரசு தன்னைக் குறி வைக்கிறது என்றும் ஆனால் அதற்காக தான் கவலைப்படவில்லை என்றும், தான் ‘ஜீரோவாக இல்லாமல் ஹீரோவாக’ இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “என்னால் நிலைநிற்க முடிகிறது என்றால், மற்றவர்களாலும் முடியும். நான் ஏன் இவர்களை சமாளிக்கிறேன் என்றால் நான் அடிமட்டத்தில் இருந்து வந்தவள். நான் ஒரு போராளி. வாழ்க்கை முழுவதும் நான் போராடுவேன். எது எப்படியோ, எதிர்க்கட்சிகள் இணைந்துவிட்டனர் 2019ல் மத்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்றார்.
“நாம் மாற்றத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறோம். இதுவரை எந்தவொரு கூட்டணியும் அமைக்கப்படவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் ஒரு தளத்திற்கு வந்துள்ளன. அவை கூட்டணிக்காக வேலைகளை துவங்கிவிட்டன. இன்னும் ஒரு 6 மாதம் பொறுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்” என்றார்.
”எல்லோரும் உடனே வாய்திறக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினால் அவர்களை மத்திய அரசின் வருமான வரி சோதனைகள் அழித்துவிடும்.” என்று கூறிய மம்தா, “நீங்கள் ஒரு நிதிஷ்குமாரைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். ஆனால், நான் 100 சரத் யாதவ்கள், 100 லல்லு பிரசாத்கள், 100 அகிலேஷ் யாதவ்கள் பற்றி யோசிக்கிறேன்” என்றார்.
மேலும், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற செயல்களால் நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்கிறார்கள் என்றும் நாட்டின் தொழில்நிறுவனங்களை அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி வரிக்கு பிறகு எத்தனை நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள் என்று எண்ணிப்பாருங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
“பணமதிப்பிழப்பு செய்வதற்கு என்ன காரணம் சொன்னார்களோ அது எதுவுமே நடக்கவில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை பணமதிப்பிழப்பால் சிதைக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பிழப்புக்கு பிறகு எவ்வளவு பணம் வங்கியில் செலுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலே மக்களுக்குத் தெரியாது:” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமித் ஷா தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றதைப் பற்றி குறிப்பிட்ட மம்தா “இந்த நாட்டிற்கு பிரதமர் மோடியா? இல்லை அமித் ஷாவா?” என்றும் கேள்வி கேட்டார்.