ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

72 ஆண்டுகள் கழித்து கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போர் கப்பல்! August 20, 2017

72 ஆண்டுகள் கழித்து கடலுக்கடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போர் கப்பல்!


இரண்டாம் உலகப்போரில் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்க போர் கப்பலின் பாகங்கள் வட பசிபிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகச் சரித்திரத்தில் மிக அதிகமான சேதம்  விளைவித்த, மிக அதிக எண்ணிக்கையில்  மனித உயிர்களைப் பலி வாங்கிய ஒரு போர் என்றால், அது இரண்டாம் உலகப் போர்தான். இந்த உக்கிரமான போரில் அமெரிக்க நடத்திய அணுகுண்டு தாக்குதலின் விளைவுகளை, போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிய பின்னரும் ஜப்பான் சந்தித்து வருகிறது. 



ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அமெரிக்காவால் வீசப்பட்ட உலகின் முதல் அணுகுண்டுக்கான முக்கிய பொருட்களை கொடுத்துவிட்டு திரும்பிய போர் கப்பல்தான் ‘USS indianapolis’. அமெரிக்காவுக்கு திரும்பிகொண்டிருந்த இக்கப்பலை 1945ம் ஆம் ஆண்டு ஜூலை 30ம் தேதியன்று பிலிப்பைன் கடற்பகுதியில் வழிமறித்துத் தாக்கி மூழ்கடித்தது ஜப்பானின் I-58 நீர்முழுகிக் கப்பல். இத்தாக்குதலில், கப்பலில் சென்ற 1,196 அமெரிக்க படை வீரர்களில் வெறும் 316 பேர் மட்டுமே உயிர் தப்பினர். 



இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட ஏழாவது நாளில் தான் லட்சக்கணக்கான உயிர்களை காவி வாங்கிய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்று 72 ஆண்டுகள் கடந்த நிலையில், மூழ்கடிக்கப்பட்ட ‘USS indianapolis’ போர் கப்பலின் பாகங்கள் வடபசுபிக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





பிலிப்பைன் கடற்பகுதியில் 5,500 மீட்டர் ஆழத்தில் இருந்த இக்கப்பலின் பாகங்களை அமெரிக்காவை சேர்ந்த பால் ஆலன் என்பவரின் கடற்பயண ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.


ஜப்பானின் நீர்முழுகிக்கப்பலால் அழிக்கப்பட்ட இக்கப்பலின் சிதைந்துள்ள பாகங்களின் புகைப்படங்களை அக்குழு அண்மையில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பால் ஆலன், “ இக்கப்பலை கண்டுபிடிப்பதற்காக நீண்டநாட்களாக முயற்சி செய்து வந்தோம். இது நாட்டிற்காக உயிர்நீத்தவர்களின் முக்கிய நினைவுச்சின்னமாக விளங்கும். போரில் உயிர்நீத்தவர்களுக்கு இத்தருணத்தில் வீர வணக்கங்களை வைத்துக்கொள்கிறோம்” என தெரிவித்தார்.


கண்டுபிடிக்கப்பட்ட கப்பலில், அமெரிக்க வீரர்களின் தியாகம் மட்டும் அடங்கியிருக்கவில்லை, அணுகுண்டு தாக்குதலால் உயிரிழந்த லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் ரத்தக்கரையும் படிந்திருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.