சனி, 12 ஆகஸ்ட், 2017

​மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு? August 12, 2017

​மதிப்பிழந்து வருகிறதா பொறியியல் படிப்பு?


பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு, அண்ணா பல்கலைகழகத்தில் கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. பொறியியல் பல்கலைக்கழகங்களில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் மட்டுமே அழைக்கப்பட்டனர். 

இவர்கள் தரவரிசை பட்டியலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் 86ஆயிரத்து 355 இடங்கள் மட்டுமே நிரம்பின. கலந்தாய்வில் 48 ஆயிரத்து 583 பேர்  பங்கேற்கவில்லை எனவும், கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 614 பேர், தங்களுக்கான இடங்களை தேர்வு செய்யவில்லை எனவும் அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. 

அதிகபட்சமாக 19,601 பேர் மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்துள்ளதாகவும், ஐடி பிரிவை 5,352 பேர் தேர்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுக் கலந்தாய்வின் முடிவில் நிரம்பாத இடங்களுக்கான துணை கலந்தாய்வு வரும் 17-ந் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

12-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் வரும் 16-ந் தேதி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.