சனி, 12 ஆகஸ்ட், 2017

​இந்தியாவில் 90% பணியாளர்களின் பிரச்னைகளை நிறுவனங்கள் முறையாக கையாளவில்லை! - ஆய்வில் தகவல் இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களின் நிலை பற்றி ‘ஜாப் புஸ்’ என்கிற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் பதில் அளித்த பணியாளர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்தியாவில் பணியாளர்கள் மற்றும் நிறுவன தலைமைகளுக்கு இடையே உள்ள உறவு பற்றி ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வின் படி, 25% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை சிறப்பாக செயல்படுவதாகவும், 35% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமை நிறைவாக இருப்பதாகவும், 40% பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தலைமையின் மேலாண்மை மோசமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆய்வில் 40% பணியாளர்கள் தங்களது பணிக்கு தேவையான வசதிகள் இருப்பதாகவும், 60% பணியாளர்கள் தேவையான வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனத்தலைமை தங்களுடன் உரையாடும் விதத்தில் திருப்தி என்று 5% பேரும், தங்கள் நிறுவனம் தங்களோடு உரையாடும் விதத்தில் திருப்தி இல்லை என்று 95% பேரும் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது பிரச்சனைகளை நிறுவனம் சரியான முறையில் கையாள்கிறது என்று 10% பேரும், நிறுவனம் தங்களது பிரச்னைகளைக் கண்டுகொள்வதேயில்லை என்று 90% பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். இந்திய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் மீது கவனம் செலுத்தும் விஷயமாக மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்ற பயிற்சியே முக்கியத்துவம் வகிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாதுகாப்பு படையினர் நடமாட்டம் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த அகதிகளை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியோ போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் ஏராளமான மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். அவர்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு பிழைப்பு தேடி அகதிகளாக செல்கிறார்கள். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் செல்வதற்குப் பல தடைகள் இருப்பதால் சட்டவிரோதமாக படகுகளில் ஏறி செல்கின்றனர். இப்படிப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு என்றே சில கடத்தல்காரர்கள் படகுகளை இயக்குகிறார்கள். 

இதேபோல, எத்தியோப்பியாவில் இருந்து 120 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஏமன் நாட்டுக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நடமாட்டம் தெரிந்தது. இதனால் தங்களை கைது செய்துவிடுவார்கள் என்று படகை ஓட்டிவந்த கடத்தல்காரர்கள் பயந்தனர். இதில் இருந்து தப்பிக்க படகில் இருந்த அனைவரையும் கடலுக்குள் தள்ளிவிட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாதுகாப்பு படையினர் 71 பேரை மீட்டனர். இவர்கள் அனைவருமே 17 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் அதிகமான அளவில் பெண்கள் இருந்தனர்.