செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

தற்கொலை விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு! August 15, 2017

தற்கொலை விளையாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அரசு!


சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும்  Blue Wales Challenge எனும் ஆன்லைன் விளையாட்டின் அனைத்து இணைப்புகளையும் அகற்ற மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Blue Whale suicide challenge எனப்படும் இணையவிளையாட்டு உலகநாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ கொடுக்கும் டாஸ்க்குகளை (Task) விளையாட்டின் பங்கேற்பாளர்கள் தினமும் செய்ய வேண்டும். நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக்கொள்வது, மொட்டமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என மொத்தம் 50 நாட்களுக்கு வெவ்வேறு வகையான டாஸ்குககள் கொடுக்கப்படம். பங்கேற்பாளர்கள் தினமும் இந்த டாஸ்குகளை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். ஒவ்வொரு டாஸ்கையும் முடித்த பிறகே அடுத்த டாஸ்க் கொடுக்கப்படும்.

இந்த விபரீத விளையாட்டின் கடைசி கட்டமான 50வது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும்படி டாஸ்க் கொடுக்கப்படும். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த விபரீத விளையாட்டில் பங்கேற்று விளையாடிய மும்பையை சேர்ந்த சிறுவர் ஒருவர், போட்டியின் 50வது நாளில் 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தற்கொலை செய்துகொண்ட சிறுவனின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாகவே பல மாறுதல்கள் தென்பட்டதாக அவரின் பெற்றோர்கள் கூறுகின்றனர். இருப்பினும் சிறுவன் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு செல்வார் என பெற்றோர்கள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. தற்கொலைக்கு முந்தைய நாளில் பள்ளியை வீட்டு வீட்டுக்கு கிளம்பிய சிறுவன், தான் நாளை பள்ளி வரப்போவதில்லை என தெரிவித்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் விளையாடி இதுவரை உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபரீத விளையாட்டால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.  மேலும் மேற்கு வங்கம், மும்பை நகரில் சிறுவர்களின் சிலர் செய்துகொண்டுள்ள தற்கொலைக்கும் இந்த விளையாட்டிற்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாயின. இந்த ஆன்லைன் விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த பிலிப் புடாகின் என்பவர் கடந்த 2013ம் ஆண்டு வடிவமைத்துள்ளார். சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டை கண்டுபிடித்ததற்காக அவரை ரஷ்யா போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். இருப்பினும் இந்த இணைய விளையாட்டை முகம் தெரியாத சில நபர்கள் தொடர்ந்து இயக்கிவருவதாக தெரிகிறது. 

இந்நிலையில், சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டும்  Blue Wales Challenge எனும் ஆன்லைன் விளையாட்டின் அனைத்து இணைப்புகளையும் அகற்ற மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கூகுள் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மைக்ரோசாப்ட், யாஹூ உள்ளிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சம் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது. இதுபோன்ற விபரீத விளையாட்டில் இருந்து சிறுவர்களை காக்க பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். 

Related Posts: