செவ்வாய், 5 டிசம்பர், 2017

மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்கள் கரை திரும்பவில்லை என அதிர்ச்சி தகவல்! December 5, 2017

Image

ஓகி புயலின்போது  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர்களில் சுமார் 1500 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என கன்னியாகுமரி மாட்டத்தைச் சேர்ந்த 8 மீனவ கிராமங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கிராத்துறையில் மீனவர்களின் மீட்பு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றத்திற்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இறையுமன்துறை முதல் நீரோடி வரையிலான 8 கிராமங்களைச் சேர்ந்த கூட்டமைப்பினர் நேற்று கிராத்துறையில் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசினர். 

ஓகி புயலின்போது இந்த 8 கிராமங்களைச் சேர்ந்த 254 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் மாயமானதாகவும் அவர்களில் 123 படகுகளில் சென்றவர்கள் நேற்று கரை திரும்பியதாகவும் அவர்கள் கூறினர். 131 விசைப் படகுகளில் சென்றவர்கள் கரை திரும்பவில்லை என்று கூறிய மீனவ கிராம கூட்டமைப்பினர் 33 நாட்டுப்படகுகளில் சென்றவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். 

விசைப் படகுகளில் சராசரியாக 15 பேர், நாட்டுப் படகில் சராசரியாக 5 பேர் என மீனவர்கள் கடலுக்குள் சென்றதாகவும் மீனவ கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மீன் பிடித்துறைமுகமான குளச்சலில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லை எனக் குற்றம்சாட்டிய  மீனவ கிராமங்களின் கூட்டமைப்பினர், படகுகளை பதிவு செய்யவதற்கான நடைமுறைகள் கடினமானதாக இருப்பதால் கேரளாவில் சென்று மீன் பிடிக்க வேண்டிய சூழல் இருப்பதாக தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர்.

நடுக்கடலில் தாங்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஜப்பான் நாட்டு கப்பலில் இருந்தவர்களிடம் உதவி கேட்டதாகவும் ஆனால் அவர்கள் உதவ முன்வரவில்லை என்றும் கதறலுடன் எடுத்துரைத்தார் ஓகி புயலின் கோர தாண்டவத்திலிருந்து தப்பி வந்த சகாயராஜ் என்கிற மீனவர்.