செவ்வாய், 5 டிசம்பர், 2017

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 145 பேர் மனு தாக்கல்! December 5, 2017

Image

​சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட 145 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான நேற்று நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12ந்தேதி நடைபெற விருந்த இடைத் தேர்தல் தீடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், அங்கு வரும் 21ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27ந்தேதி தொடங்கியது.

அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேசும், பாஜக சார்பில் கரு.நாகராஜனும் வேட்பாளர்களாகக் களம் இறங்கியுள்ளனர். கடந்த முறை அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார். இது தவிர நடிகர் சங்க பொதுச் செயலாளராரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோரும் சுயேட்சைகளாகப் போட்டியிடுகின்றனர்.  

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அலுவலகமாக செயல்படும் சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கூட்டம் அலைமோதியது. நேற்றுடன் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 107 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் மாலை 3 மணிக்கு முடிந்திருந்தாலும் முன்கூட்டியே வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்ட இரவு வரை வேட்பு மனு தாக்கல் நீடித்தது.

விஷால், ஜெ.தீபா உள்ளிட்டோரும் டோக்கன் பெற்று வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகரில் மொத்தம் 145  வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.  இரவு 9.3௦ மணி அளவில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக  சிலர் டோக்கன் வாங்காமல் காத்திருந்ததால் அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை வெளியேறக் கூறினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வரும் 7 ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. 

இதனிடையே, தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சேரன், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஷால் ஆர்.கே.நகரில் போட்டியிடட்டும் என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அளித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ள நிலையில், சுயநலத்துக்காகவே விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறிய சேரன் சக தயாரிப்பாளர்களுடன் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆர்.கே.நகர் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கவே இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உள்ளதாக கூறியுள்ள விஷால், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமக்கு யாரும் போட்டியில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

நடிகர் சங்கத்தில் இருந்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தாம் போட்டியிட்ட போதும் எதிர்ப்பு எழுந்ததாக குறிப்பிட்ட விஷால், தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்று மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.