2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வரும் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
6 வருடமாக டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, வழக்கின் தீர்ப்பு வரும் 21-ம் தேதி வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளார்.
வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினமே 2ஜி வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தீர்ப்பு மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.