திங்கள், 4 டிசம்பர், 2017

ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 60 யானைகள்! December 4, 2017

Image

ஓசூர் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த 60 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டத்தை மிகுந்த போராட்டத்திற்கிடையே வனத்துறையினர் சானமாவு பகுதிக்கு விரட்டினர். 

கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த 60 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக ஒசூர் அருகே போடூர் பள்ளம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. 

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் இருக்கும் யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ராமாபுரம், ஆழியாளம் போன்ற கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து தக்காளி, ராகி போன்ற பயிர்களை சேதப்படுத்திவந்தன. 

இந்நிலையில் இன்று காலை போடூர் பள்ளம் வனப்பகுதியில் இருந்த 60 காட்டுயானைகளை வனத்துறையினர் சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினர். 
தற்போது யானைகள் சானமாவு வனப்பகுதியில் சம்பத் பாரை என்ற இடத்தில் உள்ளன.

சானமாவு வனப்பகுதியை சுற்றியுள்ள பீர்ஜேபள்ளி, ஆழியாளம், ராமாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், ஆடு மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts: