தாமிபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குறுக்குத் துறை பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருவதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அகத்தியர் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மாவட்டத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததாலும் தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே குறுக்குத் துறையில் ஆற்றுப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. ஆற்று நடுவே உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், துணையாறுகளில் இருந்து தாமிரபரணிக்கு அதிக அளவில் தண்ணீர் வருவதாலும் ஆற்றங்கரையோர மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மருதூர் மேலக்காலில் தண்ணீர் இருபுறமும் கரைகளைத் தொட்ட படி செல்கிறது.
மருதூர் மேலக்காலில் வெள்ளம் கரைபுரண்டு பாய்வதால் செய்துங்கநல்லூர், சந்தையடியூர் உள்ளிட்ட ஊர்களில் கால்வாயை ஒட்டியுள்ள நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.