கன்னியாகுமரியில் இருந்து பிற நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய ரயில்கள் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து பழையாற்றில் வெள்ளம் பாலத்தின்மேல் பாய்வதாலும் தண்டவாளத்தில் மரங்கள் சாய்ந்துள்ளதாலும் நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை, ராமேஸ்வரம், புதுச்சேரி, நிசாமுதீன் ஆகிய நகரங்களுக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில்கள் இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.
இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலிக்கும் புனலூருக்கும் செல்லவேண்டிய பயணியர் ரயில்களும் இன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லத்தில் இருந்து பிற்பகல் 3மணிக்குப் புறப்பட வேண்டிய அனந்தபுரி விரைவு ரயில் 4:30 மணிக்குப் புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.