நாட்டிலேயே, தமிழகத்தில் தான் அரசியல் தலைவர்களுக்கு தினசரி பேனர்கள், போஸ்டர்கள் வைக்கப்படுவதாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள் கூடாது என்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி மேல் முறையீடு செய்தவழக்கு, நீதிபதிகள் சிவஞானம், ரவிச்சந்திரபாபு ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சென்னையில் முதலமைச்சர், துணை முதலமைச்சார் குடியிருப்புகள் தொடங்கி, பசுமை வழிச்சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை உள்ள சுவர்களை முழுவதும் போஸ்டர்களும், விளம்பரங்களும் முழுக்க ஆக்கிரமித்துள்ளதாக, நீதிபதிகள் அப்போது அதிருப்தி தெரிவித்தனர். சாலையின் ஒருபுறம் அழகாக பராமரிக்கப்பட்டுவரும் நிலையில், மற்றொருபுறம் இத்தகைய விளம்பரங்கள் இருப்பது, அசிங்கமாக உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
ஒரு கட்சியினர் போஸ்டர் ஒட்டினால் உடனடியாக மாற்றுக்கட்சியினரும் இதைபோல போட்டிக்கு போஸ்டர் ஒட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். காவல்துறையினர் கண்முன்னேயே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டாலும், அவர்களால் தடுக்க முடியவில்லை என்றும், நாட்டில் வேறு எந்த மாநிலங்களிலும் இப்படி தினசரி அடிப்படையில் போஸ்டர்கள் ஒட்டப்படுவதில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.